சென்னையில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு மற்றும் வெப்பசலனம் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தமிழக பகுதிகளின் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதேபோல் சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய கனழை பெய்தது. நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சூளைமேடு, கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.
நுங்கம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணா சாலையில், சென்ட்ரல் எழும்பூர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததது.
மழை பெய்து வருவதால் மாலை நேரம் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் ஆங்காங்கே இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர். இதனால் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், மேற்கு திசை காற்று வேக மாறுபாடு மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்றும் நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளது என்றும், இது அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடரும் எனவும் தெரிவித்தார்.