தரங்கம்பாடி, செப்டம்பர்- 28;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாடை கிராம ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மூலம் சுமார் 900 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.
இதனை தவிர்க்கும் பொருட்டும், கொங்கானோடை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, அங்காடியை இரண்டாகப் பிரித்து கொங்கானோடை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்திட மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், அந்த இடத்தில் ரேஷன் கடை அமைத்தால் மக்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்க ஏதுவாக உள்ளதா, ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக வைக்க இடவசதி உள்ளதா உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்படுவதன் மூலம் கொங்கானோடை கிராம பொதுமக்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டிய பெரும் சிரமம் தவிர்க்கப்படும் என்றும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் உரிய அனுமதி பெற்று விரைவில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆய்வின்போது நல்லாடை ஊராட்சி மன்ற தலைவர் காவேரி ஜெயச்சந்திரன், அங்காடி விற்பனையாளர் அன்புநேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்