டெல்லியில் நடைபெற்ற 68-வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான 68-வது தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் நடிகர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.
மேலும் இப்படத்திற்கு சிறந்த நடிகை விருதை அபர்ண பாலமுரளியும், பிண்ணனி இசைக்கான விருதை ஜி.வி.பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளருக்கான விருதை ஜோதிகாவும், சிறந்த திரைக்கதைக்கான விருதை இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோரும் பெற்றனர். இதேபோல், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகளும், மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளையும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
அதேபோல், பழம்பெரும் நடிகையான ஆஷா பரேக், இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் முழுவதும் செய்த முன்மாதிரியான பங்களிப்பிற்காக அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யா, ஜோதிகா இருவரும் விருது வாங்கும் போது, மாறி மாறி புகைப்படம் எடுத்து கொண்டதை ரசிகர்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.