“ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல திமுக, ஆனால் ஆன்மிகத்தை தங்களது சொந்த
நலனுக்கும், உயர்வு தாழ்வு கற்பிக்க மட்டுமே பயன்படுத்துவோருக்கு எதிரானதுதான்
திமுக” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வள்ளலார் முப்பெரும் விழாவில் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலைத் துறையின் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்ச்சி
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் நடைபெற்றது. வள்ளலார் இவ்வுலகுக்கு வருவிக்க உற்ற 200வது ஆண்டு தொடக்க விழா, வள்ளலார் தருமசாலை தொடங்கிய 156 வது ஆண்டு விழா, வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டு விழா என்ற வகையில் வள்ளலார் முப்பெரும் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.
ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட
இந்து சமய அறநிலைத் துறையின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
வள்ளலார் முப்பெரும் விழா 2022-2023 ஆண்டிற்கான இலட்சினை, தபால் உறை, தனிப் பெருங்கருணை அருட்பிரகாச வள்ளலார் என்ற மலரை வெளியிட்டு சுத்த
சன்மார்க்க அன்பர்களில் 5 நபர்களுக்கு நினைவு பரிசினை முதலமைச்சர்
ஸ்டாலின் வழங்கினார். மேலும் அரசு சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா அடுத்து
52 வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற இருக்கிறது.
முதல் வாரத்திற்கான நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து ஆண்டு முழுவதற்குமான அன்னதான நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வள்ளலார் முப்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:
பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள். அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாள்
என்பதுபோல் திராவிட மாடல் அரசு. வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துள்ளோம்.
சிலருக்கு இது ஆச்சரியம் அதிர்ச்சியாக இருக்கலாம். அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாகவே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. திராவிட மாடல் அரசு ஆன்மிகம், மக்களின் நன்மைக்கு எதிரானது என மதத்தை வைத்து பிழைக்கும் சிலர் பேசி வருகின்றனர். பேசியதை வெட்டி ஒட்டி சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல திமுக. ஆனால் ஆன்மீகத்தை தங்களது சொந்த
நலனுக்கும், உயர்வு தாழ்வு கற்பிக்க மட்டுமே பயன்படுத்துவோருக்கு எதிரானதுதான்
திமுக.
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற வள்ளுவரின் மண் தமிழ் மண். நட்ட கல்
பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் எனும் சித்தர்கள் உலவியது, இறைவன் ஒருவனே
இறைவன் ஜோதி மயமானவன் என்ற வள்ளலார் வாழ்ந்த மண். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை அண்ணா முன்வைத்தார்.
அறப்பணிகளை கண்காணிப்பதற்காகவே, கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு அதிகம் செல்பவர் சேகர்பாபு. வள்ளலார் நகரை உருவாக்கியவர் கருணாநிதி .
தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வடலூரில் வள்ளலாருக்கு சர்வதேச மையம்
அமைக்கப்படும். 100 கோடி மதிப்பில் அதற்கான பணி நடக்கிறது , விரைவில் கட்டுமான
பணி தொடங்கும் என்றும் வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ஓராண்டுக்கு தொடர்
அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அதற்கு 3 கோடியே 28 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின்.