குவைத்தில் கூலி வேலைக்கு சென்று கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ள 35 தமிழர்களை மீட்டுத்தர அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச்
சேர்ந்த 35 தமிழர்கள், மதுரை மேலூர் அருகே உள்ள வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சியிடம் வெளிநாட்டு வேலைக்காக ஒன்று முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி உள்ளனர். இதனையடுத்து செப்டம்பர் 4ஆம் தேதி அனைவரும் மதுரையிலிருந்து மும்பைக்கும், மும்பையிலிருந்து குவைத்துக்கும் விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
குவைத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நிறுவனத்தில் அவர்கள் கட்டடப் பணிகளை ஒரு வாரம் மேற்கொண்ட நிலையில், இனி வேலை இல்லை, நீங்கள் வேறு இடத்தில் வேலை பார்த்துக் கொள்ளுங்கள் என நிறுவனம் கூறியுள்ளது. இதனையடுத்து அவர்கள் ஏஜென்சியை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் ஒரே அறையில் அனைவரும் சிக்கி உள்ளதாகவும், பத்து நாட்களாக உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் 35 தமிழர்களின் குடும்பத்தினரும் மனு ஒன்றை அளித்தனர். அதில் “குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவில் மீட்டுத்தர வேண்டும். உணவு இல்லாமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.