ஓபிஎஸ், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், சட்டசபையில் அவருக்கு இடம் ஒதுக்கப்படக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் திருமலை திருப்பதி திருக்குடை விழாவின் 41 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ பொய் சொல்வதே திமுக அரசுக்கு வேலையாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் தேங்கி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது.
அதிமுக ஆட்சியில் வொர்க் மோர், டாக் லெஸ் என்று செயல்பட்டு வந்தது. தற்போது திமுக அரசு டாக் மோர், வொர்க் லாஸ் என்று தான் செயல்பட்டு வருகிறார்கள். சிங்கார சென்னை, இன்று டெங்கு சென்னையாக, சீரழியும் சென்னையாக மாறி வருகிறது. இந்த ஆட்சியில் லேபிள் ஒட்டும் பணியை தான் செய்வார்கள். நாங்கள் அடிக்கல் நாட்டிய பணிகளுக்கு மீண்டும் அடிக்கல் நாட்டுவார்கள். போஜராஜன் நகர் பகுதி மக்கள் ரேசன் கடைகளுக்கு 2 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசலில் வர வேண்டி இருந்ததால், அங்கேயே ரேசன் கடை 30 லட்சத்தில் கட்டினோம். எனக்கு பெயர் வந்து விடும் என்பதற்காக அதை இந்த அரசு திறக்கவில்லை.
சட்டப்பேரவைக்கு என்று தனி மரபுகள், மாண்புகள் உள்ளது. எங்கள் காலத்தில் அவை மீறப்படவில்லை. சபாநாயகர் மாண்பை மதிப்பவரா, விதியை மீறுபவரா என்று 17ஆம் தேதி பார்க்கலாம். ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. எனவே அதன்படி அவருக்கு இடம் ஒதுக்கப்படக்கூடாது. நான் சபாநாயக்கராக இருந்தால் இதைத்தான் செய்திருப்பேன். ஓபிஎஸ் பினாமி பணம் எல்லாம் பிரபாகரனிடம் தான் உள்ளது. ஆதாரம் இல்லாமல் எது வேண்டுமானால் பேசலாம் என்று இல்லை. ஆதாரத்தோடு பேச வேண்டும். தண்ணீரிலிருந்து பாலை தனியாக பிரிக்கும் அன்னப்பறவை போல பகுத்து அறியக் கூடியவர்கள் மக்கள்” என்று தெரிவித்தார்.
ராஜராஜ சோழன் இந்து மன்னரா சைவரா என்ற சரச்சை குறித்த கேள்விக்கு, “எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் நாட்டில் எவ்வளவோ பிரச்னை உள்ளது. இதை எல்லாம் சினிமா சார்ந்த அரசியல்வாதிகள் பேசலாம். யார் எந்த மதம் என்பது குறித்து அவர்கள் PhD பட்டம் வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம், ஆராய்ச்சியாளர் ஆகலாம், அரசியல் வேண்டாம். அரசியலுக்கு இது தேவையில்லாத விஷயம். ஓமந்தூரார் மருத்துவமனை பலருக்கு உதவியாக உள்ளது. அதை தலைமைச் செயலகமாக மாற்ற நினைத்தால், மக்கள் விடமட்டார்கள். அதிமுக அதை பார்த்துக்கொண்டு இருக்காது” என்றார்.