சைவத் திருமடங்களின் பழமையான மரபுகளில் தலையிட்டு இந்துக்களின் நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் கொச்சைப்படுத்துவதோடு தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் ” திராவிடர் கழகத்தை ” தடை செய்யக் கோரி கடந்த 12.03.2022 அன்று மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக இந்து மக்கள் கட்சி அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கு மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அனுமதி மறுத்து உத்தரவிட்டார்.
மேலும், இதுதொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியிப்பதால் 20 நாட்களுக்கு முன்பாக அனுமதி கேட்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. அதன்படி 20.04.2022 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி 29.03.2022 அன்று மனு அளிக்கப்பட்டது. ஆனால், துணை காவல் கண்காணிப்பாளரால் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ( WP/ 5674 / 2022 ) இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் மனு தாக்கல் செய்தார். மீண்டும் கடந்த 17.05.2022 அன்று இதே கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு மயிலாடுதுறை காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 20.09.2022 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் அய்யாசாமி, சம்பத்குமார் மற்றும் அருண்குமார் ஆகியோர் வழக்கில் ஆஜராகி காவல்துறை அனுமதி மறுத்தது சட்டப்படி தவறு என்றும், அனுமதி வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர். இதனை விசாரித்த நீதியரசர் இளந்திரையன் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார்.
“காவல்துறை அனுமதி மறுத்தது சட்டப்படி தவறு என்றும் மனுதாரரின் ( கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்) கோரிக்கை தேதி காலாவதி ஆகி உள்ளதால், மறுபடியும் மனுதாரர் வேறு ஒரு தேதியில் ஆர்ப்பாட்டத்தை முடிவு செய்து அந்த மனுவை மயிலாடுதுறை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளரிடம் கொடுக்க வேண்டும் எனவும், காவல் ஆய்வாளர் அந்த மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டுமெனவும் ” சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.