திமுக துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற உலக கராத்தே மாஸ்டர்ஸ் சங்கம் சார்பில் 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். பள்ளிப் பாடநூல்களிலும் தற்காப்புக் கலை குறித்து இடம்பெற வேண்டும். ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என அனைவரும் நிறைய சவால்களை சந்திக்கிறார்கள். குழந்தைகளுக்கு தடுப்பு தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்கள் தற்கொலை முயற்சிகள் தவிர்க்கப்படும். அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மக்களுக்கு பயன் தராத எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாது. அரசின் நடவடிக்கையால் மின்கட்டணம் குறையும், மின் திருட்டு தடுக்கப்படும், மின் கருவிகள் எல்லாம் புதிதாக மாற்றப்படும். பல துணைநிலை மாநிலங்களில் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது. அங்கே மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இது தனியாருக்கு லாபம் கொடுப்பதற்கான நடவடிக்கை அல்ல. மின் ஊழியர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் வராது.
திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பலரிடம் பல கருத்துக்கள் உள்ளது. திருவள்ளுவர் காவியுடன் இணைந்து இருக்கிறார், ருத்ராட்சை கொட்டை அணிந்து இருக்கிறார் என்பதெல்லாம் பழைய படங்கள். திருக்குறள் குறித்து ஆராய்ச்சி செய்யலாம். ஆர்.என்.ரவி இந்த மாநிலத்தின் ஆளுநர் என்ற முறையில் சில கருத்துக்களை முன் வைக்கிறார். அது அவரின் கருத்து. அவர் மறைக்கப்பட்ட அடையாளங்களை மீட்டெடுக்க நினைத்திருக்கலாம். தற்பொழுது ராஜராஜ சோழனின் அடையாளம் மறைக்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. பிறரின் நம்பிக்கையை மதிக்க வேண்டும்.
ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான். அதற்கு எனது பாராட்டுக்கள். தலைவர் அண்ணன், துணை பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பொதுமக்கள் எண்ணும் நிலை உள்ளது. யார் எப்படி இருந்தாலும், ஒரு பெண் பதவிக்கு வந்துள்ளார். அதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.