கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பேருந்து நிழற்குடையில் வைத்து தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே வீடியோவை வெளியிட்டவரை கைது செய்திருந்த நிலையில் தற்போது தாலி கட்டிய மாணவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்க்கு இளைஞர் ஒருவர் மஞ்சள் கயிறு தாலி கட்டுவது போன்ற வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆனது.
இந்த வீடியோவில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவன் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார். இதனை உடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் கட்டுயா… கட்டுயா என்று கூற.. மாணவனும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை கிழித்து இருவர் மீதும் வீசியுள்ளனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெற்றோர்களை பதற வைத்தது
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.. மாணவி ஒருவருக்கு பப்ளிக்காக பஸ் நிறுத்தத்தில் வைத்து வாலிபர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெற்றோர்களை பதைபதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மாணவ – மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுபோன்ற செயல்களில் விளையாட்டாக கூட ஈடுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர்.
போலீசார் விசாரணை இதையடுத்து, இந்த வீடியோ ஆதரத்தை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கினர் விசாரணையில் மாணவி பிளஸ் 2 படிப்பது, தாலி கட்டிய மாணவன் அங்குள்ள ஒரு பாலி டெக்னிக் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது. இந்த வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்த சிதம்பரம் போலீசார், வீடியோவில் இருந்த மாணவி மற்றும் மாணவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து வரவைத்து விசாரணை நடத்தினர்.
தாலி கட்டிய மாணவர் கைது இதற்கு மத்தியில் இந்த விவகாரம் பற்றி தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 3 நாட்கள் கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பிய நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பஸ் நிறுத்தத்தில் வைத்து 12-ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி