மயிலாடுதுறை, அக்டோபர்- 11;
மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவினைத் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் புத்தக விற்பனையை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
விழாவிற்கு நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் உள்ளிட்ட முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் நன்றியுரை வழங்கினார்.
இப்புத்தக திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையுரையில் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டார்கள். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்படுகிறது. இப்புத்தக்கண்காட்சியில் 60 க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வாசிப்பு ஒன்றே நம் வாழ்வை மேம்படுத்தும் பார்வையை விசாலப்படுத்தும். மனிதனை மனிதனாகவும், சாதாரண மனிதனை சாதனை மனிதனாகவும் மாற்றவல்லது வாசிப்பு ஒன்றே. “ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது 100 சிறைச்சாலைகள் மூடப்படுகிறது” என்பார் சுவாமி விவேகானந்தர்.
இங்கு நூற்றுக் கணக்கான நூலகங்கள் போல் இப்புத்தகத் திருவிழா துவக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி நம் அறிவை – ஆற்றலை மேம்படுத்திக் கொள்வது நமது கடமை. வீட்டில் உள்ள பெற்றோர்களும், பெரியோர்களும், பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரிய பேராசிரியர் பெருமக்களும் தவறாது இப்புத்தகத் திருவிழாவிற்கு வர வேண்டும். எத்தனை எத்தனை வகையான நூல்கள் இருக்கின்றன என்பதனை கண்டு களிக்க வேண்டும். வாங்கி படிக்க வேண்டும். இளைய தலைமுறையினரை, மாணவச் செல்வங்களை அழைத்து வர வேண்டும். அவர்களுக்கு புத்தகத்தின் பால், வாசிப்பின் பால் ஆசையை தூண்ட வேண்டும். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் கால்தடங்கள் இங்குள்ள ஒவ்வொரு புத்தக ஸ்டாலிலும் பட வேண்டும். அவர்களின் கைகள் இங்குள்ள புத்தகங்களின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி புரட்டி பார்க்க வேண்டும். புத்தகம் படிப்பதால் வாசிப்பு மனதை தெளிவுபடுத்தும், அறிவை விரிவுபடுத்தும், ஆற்றலை மேலோங்கச் செய்யும், பார்வையை விசாலப்படுத்தும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும், திட மனதை கொடுக்கும், தெளிவான சிந்தனையை கொடுக்கும். மனவுறுதியை கொடுக்கும், மன அமைதியை ஏற்படுத்தும், தீர்க்கமான முடிவுகள் எடுக்க துணை புரியும். இப்புத்தகத் திருவிழாவினை உங்கள் வீட்டு விழாவாக கருதுங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளைத் தவறாது அழைத்து வந்து, அவர்கள் கையில் காசு கொடுத்து – அவர்கள் விரும்புகின்ற புத்தகங்களை வாங்க செய்யுங்கள்.
‘புதிதாக மலர்ந்திருக்க மயிலாடுதுறை மாவட்டம் புத்தகத் திருவிழா மூலம் புதிய வரலாறு படைக்க வேண்டும்’ தினமும் அரை மணி நேரம் புத்தகம் படிக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம் பல்வேறு எழுத்தாளர்களை உருவாக்கிய மாவட்டமாகும். கம்பர். சீகன்பால்கு, அடங்குவர்.
சீகன்பால்கு தரங்கம்பாடியில் முதல் அச்சகத்தை கொண்டுவந்தார். தாய்மொழி அறிவை வளர்த்துக்கொள்வது போல, ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உலக அளவில் தன்னுடைய திறமையை வெளிக்கொணரமுடியும். நூலகத்தில் அதிக நேரம் செலவளித்தால் அறிவு வளரும். இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் உங்களுடைய ஊரில் உள்ள நூலகங்களில், பள்ளிகளிலுள்ள நூலகங்களில் இங்குள்ள புத்தக கண்காட்சியில் குறைந்த விலையில் புத்தகங்கள் வாங்கி அங்குள்ள நூலகங்களில் வைக்க வேண்டும்.இப்புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெறுவதற்குதவிய அனைத்து கொடையாளர்களுக்கும், நடத்துவதற்கு இடம் கொடுத்த ஏ.வி.சி கல்லூரி நிர்வாகத்திற்கும், தாமாக முன்வந்து உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவத்துக்கொள்கிறேன். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவர்கள் காமாட்சி மூர்த்தி (மயிலாடுதுறை), கமலஜோதி தேவேந்திரன் (சீர்காழி) ஜெயபிரகாஷ் (கொள்ளிடம்), மகேந்திரன் (குத்தாலம்), சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சிகள் துறை இணைஇயக்குநர் எஸ்.முருகண்ணன், இணை இயக்குனர்(வேளாண்மை) சேகர், உதவி ஆணையர் கோ.அர.நரேந்திரன், உதவி இயக்குநர் மஞ்சுளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளாகள் (வேளாண்மை) ஜெயபால், ஜெ.பாலாஜி(பொது), துணைப்பதிவாளர்(கூட்டுறவு) இராஜேந்திரன், நாகப்பட்டினம் மாவட்ட நூலகர் கோ.இராஜேந்திரன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.வைரவன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கச் செயலர் எஸ்.கே.முருகன், மயிலாடுதுறை வருவாய் வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, ஏ.வி.சி கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்