ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை தீபாவளி போனஸாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேத் துறையில் அரசிதழ் பதிவு பெறாத 11.58 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு இணையான ஊதியம் போனஸ் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கெசடட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித் திறனுடன் கூடிய போனஸ் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து கெசடட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கும் (ஆர்பிஎஃப் / ஆர்பிஎஸ்எஃப் தவிர்த்து) பொருந்தும்.
தகுதி வாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியோடு இணைந்த போனஸ் தொகை ஒவ்வொரு ஆண்டும் தசரா அல்லது பூஜை விடுமுறை தினங்களுக்கு முன்பாக வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும், அமைச்சரவை முடிவின் படி விடுமுறை தினங்களுக்கு முன்பாக போனஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், 2021-22 நிதியாண்டின் 78 நாள் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கப்படும். அதிகபட்ச தொகை ரூ.17,951 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் வழங்குவதற்கு ரூ.1,832 கோடி செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.