இந்தி திணிப்பை எதிர்த்து வருகிற 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞரணி அறிவிப்பு
தமிழ்நாட்டில் மறைமுகமாக இந்தி திணிக்கப்பட்டு வருவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மத்திய அரசு கல்வி, பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இந்தி திணிப்பை கொண்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனிடையே, இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தி மொழியை மத்திய அரசு திணிக்க நினைத்தால் மொழிப்போர் உண்டாகும் என எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். வருகிற 15-ம் தேதி தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தையும் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.