கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கேதார்நாத் கோயில் இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத்தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக கேதார்நாத் கோயில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி திருநாள் வரையே திறந்திருக்கும்.
இக்கோயிலுக்கு வடஇந்தியா மட்டுமல்லாது தென்இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் சென்று சிவபெருமானை வழிபடுவார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் தற்போது கேதார்நாத் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வழிபாடுவார்கள்.
இந்நிலையில் இன்று கேதார்நாத் கோயிலுக்கு யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் அங்கிருந்து குப்தகாசி நோக்கி தனியார் நிறுவன ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். அப்போது குப்தகாசி நோக்கி சென்ற ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் இருந்து கேதார்நாத்க்கு சென்ற போது ஏற்பட்ட இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா,சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. மீதி 2 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.