ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது என்றும் அந்த பரிந்துரை தொடர்பாக தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதன் அறிக்கையை சமர்பித்திருந்தது. இவை நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், வி.கே.சசிகலா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக வி.கே.சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விசாரணை ஆணையம் தன்னுடைய அதிகார வரம்பை மீறி, தேவையற்ற அனுமானங்களை கூறி, தம் மீது பழி போட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், யாரையோ திருப்திப்படுத்தும் எண்ணத்தில், தேவையற்ற சர்ச்சை கருத்துகளை ஆணையம் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2012-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும் தமக்கும் உறவு சரியில்லை என்பது ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அறிக்கை யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன் என தெரிவித்துள்ள சசிகலா, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல, ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் தாம் ஒருபோதும் தலையிட்டதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு முதல்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் தம்முடைய நோக்கமாக இருந்ததாகவும், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க தாம் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆஞ்சியோ சிகிச்சை செய்ய எந்த தேவையும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தம் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலும் மறுப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் எவ்வித சர்ச்சைகளும் இல்லை என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். எனவே, யூகத்தின் அடிப்படையில் ஆணையம் சொல்லியிருப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று வி.கே.சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.