நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் குறித்து விசாரணை குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நயன் தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணமாகி 6 மாதங்களை கடந்த நிலையில், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அதே நேரம் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதால் சர்ச்சை எழுந்தது.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் விசாரணைக்குழுவின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் விரிவாக கூறியிருப்பதாவது, 2016ம் ஆண்டே நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி பதிவு திருமணம் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நயன்தாரவின் வாடகைத்தாய்க்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. வாடகைத்தாய்க்கு அறுவை சிகிச்சை மூலமே இரட்டைக் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.
சினை முட்டை சம்பந்தமான நோயாளியின் பதிவேடுகள் தனியார் மருத்துவமனையால் முறையாக பின்பற்றவில்லை. ஐம்சிஆர் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் மூடக்கூடாது? என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டிலேயே கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டுள்ளது. ஆக.2020ல் கருமுட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நவம்பர் 2021ல் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
விக்கி-நயன் குடும்ப மருத்துவர் பரிந்துரைப்படி சிகிச்சை அளித்தோம் என தனியார் மருத்துவமனை தகவல். குடும்ப மருத்துவர் வெளிநாடு சென்று விட்டதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.
செயற்கை கருத்தரித்தல் புதிய சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே பழைய சட்டத்தின் படி வாடகைத்தாய் அமர்த்தப்பட்டுள்ளார்.
குழந்தைகள் அக்டோபர் 9ம் தேதி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.