திமுகவை சேர்ந்த பேச்சாளரான சைதை சாதிக், பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை இரட்டை அர்த்த பாணியில் ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
நடிகை குஷ்பு, இது குறித்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் , ‘பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தும்போது, அவர்கள் வளர்ந்த விதத்தையும், அவர்கள் வளர்க்கப்பட்ட நச்சுத்தன்மையான சூழலையும் காட்டுகிறது. ஒரு பெண்ணின் கருப்பையை ஆண்கள் அவமதிக்கிறார்கள்.
இந்த ஆண்கள்தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று அழைக்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியா?’ என்று கேள்வி எழுப்பி அவரையும், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை டேக் செய்துள்ளார்.
இதற்கு ட்வீட்டரில் பதிலளித்த கனிமொழி, ‘ஒரு சக பெண்ணாக, மனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது பேசப்பட்ட இடம், அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சி என்று எதுவாக இருந்தாலும் இதை ஏற்க முடியாது. வெளிப்படையாக இதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாலும், திமுகவாலும் இந்த பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி மன்னிப்பு கேட்டதும் தற்போது திமுகவுக்குள் முணுமுணுப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் திமுக பாஜக இடையே உறவு ஏற்படுகிறது என்கிற விமர்சனம் உலாவரும் நிலையில் கனிமொழியின் மன்னிப்பும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.