மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஆளுநராக ஜெகதீப் தங்கர் இருக்கும் போது ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் இடையே பனிபோர் நிலவி வந்தது. ஜெகதீப் தங்கர் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, மணிப்பூர் மாநில ஆளுநராக உள்ள இல.கணேசன் மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள இல.கணேசன் தனது அண்ணனின் 80வது பிறந்த நாள் விழாவிற்கு மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜியை அழைப்பு விடுத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தமிழகத்திற்கு வருகிறார்.
சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுடன் கூட்டணி தொடர்பாக மம்தா பானர்ஜி பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக அல்லாத முதலமைச்சர்கள் மாநாடு, அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பு குறித்தும் ஸ்டாலினுடன் பேசப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.