மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா கடந்த 25ம் தேதி முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நேற்று ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் ஆன்மீக சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள்,பரதம் மற்றும் பல்வேறு கருத்தரங்கம் நடைபெற்றது.
முக்கிய நாளான இன்று தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வழங்கும் மங்கல இசை நிகழ்ச்சி காலை 7 மணிக்கு அரங்கேறியது. அதைத்தொடர்ந்து கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியும், பின்னர் ராஜராஜ சோழனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு ராஜ ராஜ சோழன் சிலைக்கு முதலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதையடுத்து, திருமுறை திருவீதி உலா ஓதுவார்கள் ராஜ வீதியில் திருமுறை பன்னுடன் திருவீதி உலா காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பெருவுடையார் கோவிலில் வீற்றிருக்கும் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகம் காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று சரியாக நண்பகல் 1 மணி அளவில் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.
மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.