ஆரஞ்சு பால் விலையை உயர்த்திய திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பால் இடுபொருட்களின் விலை உயர்வையும், கடந்த மூன்று ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததையும், கிராமப்பொருளாதார முன்னேற்றத்தில் பால் உற்பத்தியளார்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டும் பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி, 35 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி 44 ரூபாயாகவும், நிறைக்கொழுப்பு பாலின் விலை 60 ரூபாய்க்கு நாளை முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தெரிவித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார். கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு 12 ரூபாய் அதிகப்படுத்தியிருக்கிறார்கள் என சாடியுள்ளார்.
மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பெரும்பாலான மக்கள் சில்லறை கடைகளில் தான் பால் வாங்குகின்றனர். எனவே ஆரஞ்சு பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நீல உறை மற்றும் பச்சை உறை பால்களின் விலை உயர்த்தப்படாதது வரவேற்கத்தக்கதே. ஆனால், ஆரஞ்சு நிற உறையில் சில்லறையில் விற்கப்படும் நிறைக்கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். மாதாந்திர அட்டை மூலம் வாங்கப்படும் பால் வீட்டுப் பயன்பாட்டுக்கானது. சில்லறை விற்பனையில் வாங்கப்படும் பால் வணிகப்பயன்பாட்டுக்கானது என்ற ஆவினின் யூகம் தவறு. பெரும்பாலான மக்கள் சில்லறை கடைகளில் தான் பால் வாங்குகின்றனர். எனவே ஆரஞ்சு பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.