T-20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால், அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் மிட்செல் இருவரும் அதிரடியாக விளையாடினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் 53 ரன்களும், வில்லியம்சன் 46 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஷ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் அதிரடியாக விளையாடினர். இருவரும் அரைச்சதத்தை கடந்தும் விளையாடி வந்த நிலையில், ரிஷ்வான் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் பாபர் அசாம் உடன் முகமது ஹரீஸ் கைக்கோர்ந்து விளையாடினார். இந்த இணையும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியதால் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 153 ரன்களை எடுத்து வெற்றியை ருசித்தது. பாபர் அசாம் 53 ரன்களை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
நாளை நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ? அந்த அணியும் பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டியில் விளையாடும். ஒருவேளை இந்தியா நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணி எதிர்கொள்வது ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை..