மயிலாடுதுறை- நவம்பர்- 10;
மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 6 லட்சத்திற்கும் மேல் பண மோசடி செய்ததாக பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்புசாரா பிரிவு இணை அமைப்பாளர் மீது மயிலாடுதுறை காவல் துறையில் பாதிக்கப்பட்டோர் புகார், 24 பேரிடம் பணம் வாங்கி உள்ளேன், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் வாட்ஸ் அப் ஆடியோ வெளியாகிஉள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் சின்னப்பன், இவரது மகன் நிஜித்குமார் என்பவருக்கு மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறையில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் விஜயன் என்பவர் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விஜயன் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவின் மாநில இணை அமைப்பாளராக உள்ளார். சின்னப்பன், பூம்புகார் பகுதியைச் சேர்ந்த உறவினர் சந்திரன் என்பவர் மூலமாக விஜயனிடம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமாக கடந்த வருடம் மே மாதம் கொடுத்துள்ளார்.
முதலில் மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்த விஜயன் பிறகு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். வேலை கிடைக்காத நிலையில் மீண்டும் பணத்தை கேட்ட போது இரண்டு காசோலைகளை விஜயன் கொடுத்துள்ளார். ஆனால் அவற்றில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சின்னப்பன் தன்னை அடியாட்கள் மூலம் விஜயன் மிரட்டுவதாகவும் தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷாவிடம் நேரில் புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் காவல் நிலையத்திற்கு வரும்படி கூறியிருந்தார் அதன் அடிப்படையில் காவல் நிலையம் சென்றனர் புகார் குறித்து விசாரிப்பார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்திருந்த நிலையில், பணி விஷயமாக செல்வம் வெளியே சென்றதால் வியாழக்கிழமை புகார் விசாரிக்கப்படவில்லை. இதனிடையே பாதிக்கப்பட்ட சின்னப்பனுக்கு விஜயன் ஒரு வாட்ஸ் அப் ஆடியோ மெசேஜ் அனுப்பி இருந்தார்.
அதில் தங்கள் ஒருவரிடம் மட்டுமல்ல மேலும் 24 பேரிடம் பணம் வாங்கியுள்ளேன், நான் பணம் கொடுத்த இடத்தில் என்னை ஏமாற்றி விட்டனர். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்யுங்கள், பத்திரிகைகளில் வேண்டுமானாலும் வெளியிடுங்கள் என்று ஆடியோ மெசேஜ் அனுப்பி உள்ளார். நாளை இந்த புகார் குறித்து ஆய்வாளர் விசாரணை செய்ய உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த விவகாரம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்