மயிலாடுதுறை, நவம்பர்- 14;
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பருவ மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மயிலாடுதுறை புனித லூர்து மாதா மருத்துவமனை சார்பில் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பொதுநல மருத்துவ முகாம் கூறைநாடு புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பலவகையான புற்றுநோய் குறித்து மருத்துவர் அருட்சகோதரி டீனா விழிப்புணர்வு உரையாற்றினார். தொடர்ந்து பொதுநல மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இரத்த பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை மற்றும் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளைச் சார்ந்த ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை புனித லூர்து மாதா மருத்துவமனையின் தலைமை நிர்வாகி அருட்சகோதரி கிரேசி ஏற்பாடு செய்திருந்தார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்