வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் மூலம் பருவமழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெளுத்து வாங்கிய மழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழியில் 44 செ.மீ அளவிற்கு மழை பெய்ததால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இதையடுத்து, வங்கக்கடலில் கடந்த 9-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஓரிரு நாட்களில் வலுவிழந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் மழையின் பாதிப்பு குறைந்தது. அதேநேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும், தமிழ்நாட்டில் வருகிற 20-ம் தேதிக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வருகிற 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.