0 0
Read Time:5 Minute, 30 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ள பழமையான நகரமாகும். மயிலாடுதுறை நகரின் மேன்மை குறித்து 1200 ஆண்டுகளுக்கு திருஞானசம்பந்தர் தேவார பதிகங்களில் 11 தனி பாடல்கள் பாடியுள்ளார். அந்தப் பாடல்களில் மயிலாடுதுறை நகரின் பழமை பற்றியும் ஆன்மீக சிறப்பு பற்றியும் செந்தமிழ் பாடலாக பாடியுள்ள திருஞானசம்பந்தர் வரமா மயிலாடுதுறை என்று மயிலாடுதுறை வரங்கள் நிறைந்த ஊர் என்றும் குறிப்பிடுகின்றார்.

சிவபெருமானின் சொந்த ஊர் என்று அந்தப் பாடல்களில் பாடியுள்ள நிலையில், மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மயிலாடுதுறை காவிரி கரையில் மயூரநாதர் ஆலயம் வதான்யேஸ்வரர் ஆலயம் ஐயாரப்பர் ஆலயம் புனுகீஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயம் படித்துறை விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்கள்108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான பரிமள ரங்கநாதர் ஆலயம் ஆகியவற்றில் ஐப்பசி மாதம் கடைசி பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் விழா நடைபெறுவது வழக்கம் திருத்தேர் உற்சவம் திருக்கல்யாணம் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு மயூரநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேக பணிகள் நடப்பதால் அதனை தவிர்த்து மற்ற ஆலயங்களில் கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.

ஆற்றின் தென்கரைக்கு ரிஷப தீர்த்தம் என்றும், வலது கரைக்கு ஞான புஷ்கரணி தீர்த்தம் என்றும் பெயர். ஆற்றில் உள்ளே 16 தீர்க்க கிணறுகள் அமைந்துள்ளன. புனிதம் வாய்ந்த இடமாக கருதப்படும் காவிரி ஆற்றில் கங்கை யமுனை சரஸ்வதி நர்மதா கோதாவரி உள்ளிட்ட ஏழு புண்ணிய நதிகள் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள காவிரியில் நீராடுவதாக ஐதீகம்.

ரிஷப தேவரின் செறுக்கை இங்கே இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது எனவே காவிரியின் நடுவே ஆற்றின் நீரோட்டத்தில் எதிர்புறமாக மேற்கு நோக்கியவாறு நந்தி தேவருக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த புனித தீர்த்தமான மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நேற்று தீர்த்தவாரி நடைபெறுவதை முன்னிட்டு இரு கரைகளிலும் அனைத்து ஆலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி அளித்தனர்.

அனைத்து ஆலயங்களின் அஸ்திர தேவருக்கும் காவிரி கரையில் பால் பன்னீர் இளநீர் சந்தனம் தயிர் தேன் நெய் உள்ளிட்ட 16 வகை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தருமபுரம் ஆதின 27-ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சார சுவாமிகள், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், நகர் மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் புனித நீராட வருகை தந்துள்ளனர்.

இதற்காக மயிலாடுதுறை எஸ்பி நிஷா தலைமையில் அதிரடிப்படை போலீசார் உள்ளிட்ட 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் தஞ்சையைச் சேர்ந்த 60 அதிரடி படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீயணைப்பு படையினர் மாநில பேரிடர் மேலாண்மை காவல்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %