விசிக மீது புறக்கணிப்பு, வஞ்சனை இயல்பாக இருக்கும் என தெரிவித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்ல 99 சதவீதம் போர் இருப்பார்கள் என்றார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் திருமாவளவன் பற்றிய திருமாவளவர் பிள்ளைத்தமிழ் மற்றும் நீதியின் குரல் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், புலவர் சிவலிங்கம் எழுதிய திருமாவளவர் பிள்ளைத்தமிழ் மற்றும் கவிஞர் இளமாறன் இயற்றிய நீதியின் குரல் நூல் வெளியிடப்பட்டது. எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ் துறை தலைவர் அரங்கமல்லிகா நூல்களை வெளியிட்டார்.
விழாவில் பங்கேற்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகளின் தொடக்க காலத்தில் பின் புலம், பரிந்துரை இல்லாமல், ஊடக பலம் இல்லாமல் நம் உழைப்பு பற்றி சொல்ல ஆட்கள் கிடையாது. எங்கோ சிலர் செய்யும் சில தவறுகளை நம் கட்சி மீது முடிச்சு போட்டு நான் தான் தலைவன் என அவதூறு அரசியல் பரப்புவார்கள் என்றார். அவதூறு பரப்பும் மோசமான களம் தான் அரசியல் களம். அரசியல் என்பது அதிகாரத்தோடு தொடர்புடையதால் 360 டிகிரியிலும் பகை உண்டாகிறது. பின்புலம் இல்லாமல் ஒருவன் கிளம்பினால் எவ்வளவு அவதூறு வரும் என எண்ணிப்பார்க்க வேண்டும் என கூறினார்.
கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் இருப்பார்கள். விசிக மீது புறக்கணிப்பு வஞ்சனை இயல்பாக இருக்கும். தலைவர்களை உருவாக்குவதே தன்னுடைய உழைப்பு. கண்ணை மூடிக்கொண்டு தன் தலைமையை ஏற்றுக் கொள்ளாதீர்கள். கருத்தியல் புரிதலோடு பின்னால் வாருங்கள். ஜாதியை பார்த்து தன்னை தலைவராக ஏற்றுக் கொள்ளாதீர்கள் என அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ராஜீவ் கொலை வழக்கில் இருந்து 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் 6 பேருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் சீராய்வு மனு எதிர்ப்பார்த்த ஒன்று என்றும் கூறினார். தீர்ப்பை உறுதிப்படுத்த ஆறு பேர் சட்டப்படி செல்ல வாய்ப்பு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறு என வர வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்றும் ஆனால் ஆளுநர் தன் கடமையை செய்ய தவறிவிட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.