0 0
Read Time:3 Minute, 0 Second

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூர் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்கம்-1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம்-2 ஆகிய சுரங்கங்களுக்கு தேவைப்படும் நிலங்கள் குறித்து அரசால் ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வேலைவாய்ப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலஎடுப்பால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், வேலைவாய்ப்பு பெற பயிற்சிகள் அளிக்கவும், உயர் இழப்பீடு வழங்கவும் முன்வந்துள்ளது. மேலும், வேலையில் சேர விரும்பாதவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை 20 வருடங்களுக்கு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ரூ.500 உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாதாந்திர உதவித்தொகை பெற விரும்பாதவர்களுக்கு வேலைக்கு பதிலாக, ஒருமுறை வழங்கப்படும் வாழ்வாதார தொகை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மூன்று பிரிவுகளில் வழங்கப்படும். விண்ணப்ப படிவம் வேலைவாய்ப்பு மற்றும் இதர பலன்களை பெற விரும்புவோர் உரிய விண்ணப்ப படிவங்களை மாவட்ட வருவாய் அலுவலர் (என்.எல்.சி. நிலஎடுப்பு) நெய்வேலி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். நிலத்திற்கான உரிய பணபலன்களை பெற்று நிலத்தை ஒப்படைத்தபின் வேலை வாய்ப்பானது முதுநிலை வரிசை அடிப்படையில் கணக்கிடப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட உள்ளது. அதனால் நில எடுப்பால் பாதிக்கப்படும் மக்கள் சிறந்த முறையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விரைவில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் (என்.எல்.சி. நிலஎடுப்பு) அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %