0 0
Read Time:7 Minute, 38 Second

திருக்கடையூர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இத்தலத்தில் மார்க்கண்டேயருக்காக சுவாமி, கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிறப்பு பெற்ற திருக்கடையூர் கோவிலுக்கு 60 வயது தொடங்கியதை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அவரது மனைவி அனுராதா, மகள் ஜெயஹரனியுடன் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் 64 கலசங்கள் அமைக்கப்பட்டு, உக்கர ரத சாந்தி ஹோமம் மற்றும் பூஜைகள் செய்தார். தொடர்ந்து டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதாவுக்கும் கலசபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
பின்னர் தம்பதியர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

அதனை அடுத்து டிடிவி.தினகரன் குடும்பத்தினருடன் அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். நிகழ்ச்சியில் உதவியாளர் ஜனார்த்தனம், அமமுக. மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜைகளை கணேஷ் குருக்கள் தலைமையிலான 15 சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.

தொடர்ந்து டிடிவி தினகரன் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு குடும்பத்துடன் சென்று தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால் அமைச்சர்களிடையே சண்டை ஏற்படுகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இது உதாரணம். அதிமுக என்ற கட்சியே செயல்படாமல் உள்ள நிலைமைக்கு எடப்பாடி காரணம்- டிடிவி தினகரன் மயிலாடுதுறையில் பேட்டி.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நட்சத்திர ரீதியாக தனது 59 ஆவது வயது நிறைவடைந்து 60வது வயது துவங்குவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உக்கிர ரத சாந்தி ஹோமங்கள் செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து புகழ் பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை டிடிவி தினகரன் குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் , அதிமுக கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல், கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். அதிமுக கட்சி பற்றி பேசுவது தேவையற்றது. தேர்தல் சமயத்தில் பேசிக் கொள்ளலாம், சசிகலா வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது அது பற்றி எனக்கு தெரியாது. டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் மத்தியில் பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லுகின்ற கூட்டணி அமைக்கப்படும். திமுக ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சம்பாதித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் மோசமான நிலையை சந்திப்பார்கள், வருகின்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும், மழை வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது திமுக விடியல் ஆட்சியின் அவலங்கள் மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தமிழக அரசு உள்ளது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரி கட்டியதில் ஊழல் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால் தான் திமுகவிற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். எந்த ஊழலாக இருந்தாலும் கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தான் தீர வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க வேண்டும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் குறைந்தது ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் அதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்கள் இடையே சண்டை ஏற்படுகிறது இதுவும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணம் என்றார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %