மயிலாடுதுறை, நவ.25-
மயிலாடுதுறையில் பொதுசுகாதாரத்துறையின் நூற்றாண்டுவிழாவையொட்டி சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆண்டு விழா நடந்தது.
தமிழக அரசின் மிக இன்றியமையாத துறைகளில் ஒன்றான பொதுசுகாதாரத்துறை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே சுகாதாரத்துறை என்ற ஒட்டுமொத்த துறையில் இருந்து 1922- ஆம் ஆண்டு தனியாக பிரித்து இன்றுவரை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறை தொடங்கி நூறு ஆண்டுகள் ஆனாதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுசுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை நேற்று கொண்டாடப்பட்டது, அதனையொட்டி தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் இருந்து பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, சேலைகள் அணிந்து வாகன பேரணியாக புறப்பட்டு மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியை அடைந்தனர்.
அங்கு நடந்த நூற்றாண்டு விழாவிற்கு துணை இயக்குனர் குமரகுருபரன் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி தங்கவேல், டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினர்.
டிஆர்ஓ முருகதாஸ், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் குருநாதன்கந்தையா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலரவிக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மஞ்சுளா, ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர்கள் சங்கரி, சங்கீதா, குழந்தைகள் வளர்ச்சிதிட்ட மாவட்ட திட்ட அலுவலர் தமிமுன்னிசா, ஓய்வுபெற்ற துணை இயக்குனர் மதிவாணன் உட்பட பலர் சுகாதாரத்துறையினரின் சேவைகள், கரோனா காலத்தில் ஆற்றிய பணிகள் குறித்து வாழ்த்தி பேசினர்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர்கள் கோபி, அரவித், ராஜ்மோகன், ரமேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் 100ம் ஆண்டு விழாவையொட்டி மூவர்னத்தில் நூறுவடியில் நின்று பலூன்களை பறக்கவிட்டனர். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். நகர்நல அலுவலர் லட்சுமிநாராயணன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்