திமுக மாணவர் அணியில் புதிதாக தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அந்த பதவிக்கு கட்சியின் செய்தி தொடர்பு இணைச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவில் உட்கட்சித் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கட்சியின் 20 அணிகளின் நிர்வாகிகள், குழுக்களின் நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், மாணவர் அணி நிர்வாகிகளை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, அக்கட்சியின் மாணவர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவரணியில் தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவரணி செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் தொடர்ந்து நீடிக்கிறார். இணைச்செயலாளர்களாக பூவை ஜெரால்டு, எஸ் மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவரணி துணைச்செயலாளர்களாக கா அமுதரசன், பூர்ண சங்கீதா உள்ளிட்டோரையும் நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவரணி இணைச்செயலாளராக இருந்த அரசுக்கொறடா கோவி செழியன் வயதின் காரணமாக மாணவர் அணி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற அணிகளின் நிர்வாகிகள் பட்டியலும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.