நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என நாகை மாவட்ட கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் சி. முனியநாதன் தெரிவித்தாா்.
நாகை மாவட்டத்தில் கீழையூா், நாகை நகரம் மற்றும் ஊரகப் பகுதிகள், திருமருகல் ஆகிய இடங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு முழு வீச்சில் நடைபெறுகிறது. இதன்படி, நாள் ஒன்றுக்கு ரூ.1.50 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேவைக்கும் அதிகமான அளவில் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. 4 நாள்களுக்குத் தேவையான ஆக்சிஜன் எப்போதும் கையிருப்பில் வைத்துக்கொள்ளப்படுகிறது. 3 நாள்களுக்கு ஒரு முறை ஆக்சிஜன் நிரப்பப்படுகிறது. இதை கண்காணிக்க, கூடுதல் ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சி. முனியநாதன் தெரிவித்துள்ளார்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.