தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் முயற்சியாக மாணவர்களிடம் உள்ள இயல்பான கலைத்திறனை கண்டறியும் நோக்குடன் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகரத்தில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைத் திருவிழா தலைமை ஆசிரியர் வி. அன்புச்செழியன் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் கலந்து கொண்டு சிறந்த கலைத்திறன் படைத்த மாணவர்களை பாராட்டினார்.
விழாவில் உதவி தலைமை ஆசிரியர்கள் முருகானந்தம், லதா, அறிவியல் ஆசிரியர்கள் செங்குட்டுவன், ஆசிரியர் பயிற்சி மேற்பார்வையாளர் முருகையன், கென்னடி, ஓவிய ஆசிரியர் கௌசல்யா, கைவினை ஆசிரியர் ஞானலதா,ஓவிய ஆசிரியர் ராஜலிங்க லட்சுமி ஆகியோர் முன்னிலையில் மாணவிகளின் வில்லுப்பாட்டு, தப்பாட்டம்.ஓவியம்,கைத்திறன், பேச்சுத்திறன்,நடனங்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் கிங் பைசல் கலந்து கொண்டு சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.