0 0
Read Time:4 Minute, 5 Second

எம்.ஜி.ஆர் அதிமுகவில் இருந்த காலத்தைவிட திமுகவில்தான் அதிக காலம் பயணித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சருமான ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜானகி எம்.ஜி.ஆர் கலைத்துறையிலும் அரசியல் துறையிலும் ஆற்றிய பங்குகளை நினைவுகூர்ந்தார். ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டபோது அதனை கருணாநிதி கண்டித்ததையும் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

எம்.ஜி.ஆர் தம் மீது அளவு கடந்த பாசமும், அன்பும் வைத்திருந்ததாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடன் நெருங்கிப் பழகியவன் தாம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார். சத்யா ஸ்டூடியோவிற்கு எம்.ஜி.ஆரை பார்க்க தாம் பல முறை சென்றுள்ளதாக கூறிய மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். படம் வெளியானால் முதல்நாள் முதல்காட்சியை பார்த்துவிடுவேன் எனக் கூறினார். தாம் நடித்த படம் எப்படி உள்ளது என எம்.ஜி.ஆர் கேட்பார் என்றும் படம் எவ்வாறு இருந்தது என்று தாம் வெளிப்படையாக தெரிவிப்பேன் என்றும் முதலமைச்சர் கூறினார். தம்மை பெரியப்பா என்று தாம் அழைப்பதையே எம்.ஜி.ஆர் விரும்பியதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், ஒரு முறை சார் என்று தாம் எம்.ஜி.ஆரை அழைத்ததாகவும், அதனை விரும்பாத எம்.ஜி.ஆர், அது குறித்து கருணாநிதியிடம் புகார் தெரிவித்தாகவும் எம்.ஜி.ஆருடன் பழகிய நாட்களை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“பெரியப்பா என்கின்ற முறையில் சொல்கிறேன், நீ படிக்க வேண்டும், உனது ஸ்டாலின் என்கிற பெயரிலேயே புரட்சி தோன்றுகிறது, கருணாநிதி மகன் கருணாநிதி போல் செயல்பட வேண்டும்” என்று எம்.ஜி.ஆர் தனக்கு கூறிய அறிவுரைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.

தமிழக அரசியல் வரலாற்றை நன்கு அறிந்தவர்களுக்கு எம்.ஜி.ஆர் விழாவில் தாம் பங்கேற்பது ஆச்சர்யமாக இருக்காது எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர் 20 ஆண்டுகள் திமுகவில் பயணித்தவர் என சுட்டிக்காட்டினார். எம்.ஜி.ஆர் அதிமுகவில் இருந்த காலத்தைவிட திமுகவில்தான் அதிக காலம் பயணித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தனது படங்களின் மூலம் திராவிட கொள்கைகளை மக்களிடையே கொண்டு சென்றவர் எம்.ஜி.ஆர் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். திராவிட இயக்க கொள்கைகளை பாதுகாப்பதுதான் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி எம்.ஜி.ஆருக்கும் நாம் செய்யும் மரியாதை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %