திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்கிறார். இன்று காலை 9.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதிவியேற்று விழா நடைபெறுகிறது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிராமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கும், திரையுலக நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவரின் கட்சி பணி-மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் தன்னுடைய அமைச்சரவையில் இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கு ஒதுக்கப்படும் துறையிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி மக்களின் மனங்களை வெல்வார் என்பதில் ஐயமில்லை என்று அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 45 வயதான உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் இளம் வயதில் அமைச்சர் பொறுப்பேற்றவர்களில் ஒருவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.