0 0
Read Time:3 Minute, 30 Second

ஹாக்கியில் வெற்றிப் பதக்கங்களை குவித்து வரும் அரசுப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், அதற்கான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கல்வியின் பிரிக்க முடியாத அங்கம்தான் விளையாட்டு. அதற்கிணங்க கடலூரில் அரசுப் பள்ளி மாணவிகள் ஹாக்கி விளையாட்டில் தங்கள் திறமைகளை மெய்ப்பித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஹாக்கியில் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். பள்ளி உடற்பயிற்சி ஆசிரியருடன் இணைந்து சிவராஜ் என்ற பயிற்சியாளர் கட்டணமின்றி ஹாக்கி விளையாட்டில் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இதன் காரணமாக இப்பள்ளி மாணவிகள் ஹாக்கி போட்டியில், இதுவரை குறுவட்ட அளவில் 78 தங்கம் மற்றும் 16 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் 18 தங்கம் மற்றும் 18 வெள்ளி பதக்கங்களையும் பெற்று முத்திரை பதித்துள்ளனர். வரும் ஜனவரி மாதம் தர்மபுரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஹாக்கிப்போட்டியில் விளையாடவும் தேர்வாகியுள்ளனர்.

மாணவிகளுக்கு பள்ளியில் ஹாக்கி பயிற்சி மேற்கொள்ள போதுமான எந்த வசதியும் இல்லை. அதற்கான மைதானம் கூட கிடையாது. மேலும் கோல்கீப்பர் கிட் உள்ளிட்ட எந்த விளையாட்டு உபகரணங்களும் இல்லாமல் தவிக்கின்றனர். வெளியில் போட்டிக்கு செல்லும் போது தேவையான உபகரணங்களை கடன்பெற்றே விளையாடி விட்டு வருவதாக கூறுகின்றனர் மாணவியர்.

தினமும் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு சென்றே பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான மாணவிகளின் பெற்றோர்கள் விவசாயக் கூலி குடும்பத்தினர் என்பதால் போக்குவரத்து செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இதனால் ஹாக்கி பயிற்சியாளர் சிவராஜ், அவர்களுக்கு பேருந்து கட்டணம் மற்றும் காலை உணவு போன்றவற்றுக்கு தனது சொந்த பணத்தில் செலவு செய்து உதவுகிறார்.

இதனால் தமிழக அரசு தங்கள் பள்ளியிலேயே ஒரு ஹாக்கி மைதானம் அமைத்துக் கொடுத்து விளையாட்டு உபகரணங்களையும் வாங்கி கொடுக்க வேண்டும் என ஹாக்கி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %