கொரோனா காலத்தில் ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணி வழங்க கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ரூ.14,000 மாத சம்பளத்தில் தற்காலிக முறையில் பணி அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி டிசம்பர் மாதம் எம்ஆர்பி கோவில் 2,472 தற்காலிக செவிலியர்களை பணியில் இருந்து விடுவித்து சுகாதாரத் துறையின் சார்பில் அரசாணை பிறபிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதற்கு பதிலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும்
என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணியானது ஒவ்வொரு 11 மாதத்திற்கும் ஒருமுறை சர்வீஸ் பிரேக் அப் செய்து நிரந்தரமாக தற்காலிக ஊழியர்கள் ஆகவே இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். ஆகையால் தங்களுக்கு பணி பாதுகாப்போடு நிரந்தர பணி வழங்க கோரி தமிழ்நாடு முழுவதிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணி வழங்க கோரியும், இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், தொகுப்பூதிய அடிப்படையில் பணி அமர்த்திட கோரியும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் பொழுது
செவிலியர்களுக்கு ஆதரவாக அவர் செய்த ட்விட் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில், தற்காலிக செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியையும் கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.