புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் இரட்டைக் குவளை முறை தொடர்பாக இருவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.
மீண்டும் அதே மாவட்டத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற பட்டியலினப் பெண்களை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதுடன் அவர்களைத் தாக்க முயன்ற தீண்டாமை கொடுமைச் சம்பவம் அரங்கேறியது.
இந்நிலையில் மங்களநாடு கிராமத்தின் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் மங்கள நாட்டில் டீக்கடை நடத்தி வந்த வெங்கடாசலம், அருள்ராஜ் ஆகிய இருவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.