மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் அம்மன் காவேரி பாலத்தின் இணைப்பில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் பொது மக்களுக்கு பெரும் சிரமம் -உடன் சரிசெய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பொதுப்பணித்துறைக்கு வேண்டுகோள்!
மயிலாடுதுறையில் உள்ள கூறைநாடு தீப்பாய்ந்தான் அம்மன் கோவில் அருகில் காவிரியின் குறுக்கே பொதுமக்கள் நலன்கருதி பாலம் கட்டப்பட்டுள்ளது.. அந்தப் பாலம் பொதுமக்களுக்கும் மற்றும் அவ்வழியாக சுடுகாட்டுக்கு இறந்தவர்களின் உடல்களை சுமந்துச் செல்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆனால் அப் பாலம் கட்டப்பட்டது முதல், முறையான சாலை இணைப்பு வசதி செய்யப்படாத காரணத்தினால் அவ்வழியே செல்லும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பாலத்தில் ஏறுவதற்கே மிகவும் சிரமப்பட்டு வளைந்து நெளிந்து செல்கின்றார்கள்.
பாலமும் சாலையும் இணையும் இடத்தில் உள்ள பள்ளம் சுமார் அரை அடி இருப்பதால் முறையான தேவையான அளவிற்கு இணைப்பு சாய்வு தளவசதி செய்யப்படாததால், பாலத்தின் தெற்குப் புறத்தில் இருந்து ஏறுகின்ற, இறங்குகின்ற அனைவரும் மிகவும் சிரமப்படுகிறார்கள். இணைப்பு சரி செய்யாத காரணத்தினால் பலர் இந்த பாலத்தை தவிர்த்து செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆகவே உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பாலத்தின் இணைப்பு பகுதியை பார்வையிட்டு உடனடியாக சாய்வு தள இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் அவ்வழியாக செல்லுகின்ற இறந்தவர்களின் உடலை சுமந்து செல்கின்ற வாகனங்களும், சுலபமாக ஏறுகின்ற வகையில் சீரமைத்துக் கொடுத்து உதவிட மயிலாடுதுறை மக்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.