பொங்கலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இன்று இயக்கப்பட்ட பேருந்துகளில் 77,376 பயணிகள் பயணித்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக இன்று முதல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் என மொத்தம் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி, போக்குவரத்து துறை சார்பில் பொங்கலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 1,623 பேருந்துகளில் 77,376 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1,72,139 பயணிகள், இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.