மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டாரத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் & தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.தி. அன்பழகன், தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு உட்பட உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் எப்படி வாங்குவது மற்றும் உபயோகிப்பது என்பதை பின்வருமாறு கூறியுள்ளார்.
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை 15.01.2023 அன்று விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
*பொதுமக்கள், உணவு விற்பனையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்பு மற்றும் பொங்கல் தயாரிக்கத் தேவையான அரிசி, வெல்லம், நெய் திராட்சை, முந்திரி உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது. பொதுமக்கள் உணவுப்பொருட்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிய உரிம்பெற்ற விற்பனை நிறுவனங்களில் மட்டும் கவனமாக வாங்கி உபயோகிக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
அரிசியில் பூஞ்சைகள் இல்லாத அரிசியாகவும், தரமான வெல்லம்தானா என்பதை அறிந்தும், நெய் உணவு தயாரிக்க உள்ளதுதானா அல்லது கரூர் நெய் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் போலி நெய்யா என்பதை சரிபார்த்தும், அதேபோல் தரமான திராட்சை, முந்திரி உள்ளிட்ட பொருட்களை கவனமாக பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டுகின்றோம்.
மேலும் ….
பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் ஒன்றான கரும்பு விளையவைக்கும் விவசாய நிலத்திலிருந்து விற்பனை மேற்கொள்ளப்படும் இடங்கள்வரை பல்வேறு அசுத்தங்களை கடந்தபின்னரே தங்கள் இல்லத்தை வந்தடைகின்றது. இந்நிலையில் கரும்பை துண்டாக்கி நேரடியாக கடித்து தின்பதால் பல்வேறு நோய்கள் உண்பவர்களுக்கு வருவதற்கு வழிவகுக்கும். எனவே கரும்பை சுவைப்பதற்கு முன்னர் சுத்தமான நீரில் கழுவிய பின்னர் உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உணவு விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற எண்ணில் தயவுசெய்து தெரிவியுங்கள். உடன் நடவடிக்கை எடுக்கப்படும், புகார்தாரரின் ரகசியம் காக்கப்படும் என்று கூறினார்.
செய்தியாளர்:க சதீஷ்மாதவன்