கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரம் முருகபிரியா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 57). இவர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த அவர், மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். பின்னர், நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ரோந்து பணியை முடித்துவிட்டு சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
அப்போது போலீஸ் நிலையத்திலேயே மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக போலீசார், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மகேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாரடைப்பால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சக போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே மகேந்திரன் உடல் அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அங்கு சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் போலீசார் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறந்த மகேந்திரனுக்கு ரோஜா வள்ளி என்கிற மனைவியும், ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்ற 2 மகள்களும் உள்ளனர்.