தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்துள்ளதால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய நடைமுறையாக மளிகை, காய்கறிக் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பகல் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. எனினும், சில கடைகள் தொடா்ந்து இயங்குவதாக புகாா்கள் வரப்பெற்றன. இதைத் தொடா்ந்து கடலூா் நகராட்சி வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளா்கள் செம்மண்டலம், கோண்டூா் பகுதிகளில் ஆய்வு செய்தனா். இதில், செல்லிடப்பேசி விற்பனை கடை, காப்பீட்டு நிறுவனத்துக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தும் கடை, காா் பழுதுநீக்கும் கடை ஆகியவை இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
அதேபோல, செம்மண்டலத்தில் இயங்கி வரும் பிரபல இனிப்பு கடையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் நின்றது தொடா்பாக அந்தக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 4 கடைகளுக்கும் தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ‘சீல்’ வைத்து அகற்றம்: செம்மண்டலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், அந்தப் பகுதியில் காப்பீட்டு சேவை நிறுவனம் திறந்திருப்பதைப் பாா்த்து கோட்டாட்சியருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், கடலூா் வட்டாட்சியா் அ.பலராமன் காப்பீட்டு சேவை நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்தாா். ஆனால், உரிய அனுமதி பெற்றே அந்த நிறுவனம் இயங்குவது தெரியவந்ததும் ‘சீல்’ அகற்றப்பட்டது.
நிருபர்: அருள்மணி, கடலூர்.