தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியான அறிவிப்பில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான விவரங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த ஜனவரி 30ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று காலை 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த நிலையில் தற்போது 5 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சைபர் பிரிவு துணை ஆணையர் கிரன் சுருதி ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை எஸ்.பி.தீபாசத்யன் சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டறை எஸ்.பியாகவும், கடலூர் மாவட்ட எஸ்.பி.சக்தி கணேசன் சென்னை சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் மாவட்ட எஸ்.பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி ரவளி பிரியா தமிழ்நாடு காவல் சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.