தரங்கம்பாடி, பிப்ரவரி- 05:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால், “திருப்புகழ்”, “கந்தர் அனுபூதி”, “கந்தர் அலங்காரம்” உள்ளிட்ட நூல்களில் திருவிடைக்கழி பற்றி பாடப்பட்டுள்ளது. சேந்தனார் பெருமானால் பாடப்பட்ட “திருவிசைப்பா”, திருப்பல்லாண்டு ஆகிய நூல்கள் இந்த ஆலயத்தில் இருந்து இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோயில் சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம் என்று தலபுராணம் கூறுகின்றது. பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த கோயில், முருகனுக்கு உரிய பாவம் கழிந்ததால், திருவிடைக்கழி என்று அழைக்கப்படுகிறது.
இத்தலம் திருச்செந்தூருக்கு நிகராக போற்றப்படுகிறது. இத்தலத்தில் உள்ள குரா மரத்தின் அடியில் தியானம் செய்ய மனதெரிவு, அறிவுக்கூர்மை உண்டாகும். மேலும் முருகன், தெய்வானை திருமண நிச்சயம் நடைபெற்ற தலமாதலால் இங்கு வழிபடுபவருக்கு தீரா பழி நீங்கி, மனதெரிவு, சிறந்த அறிவும் பெற்று, திருமணத்தடை நீங்கி சுபிட்சம் பெருகும் எனவும் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் அதிகாலை முதல் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் அறங்காவலர் ஜெயராமன் செயல் அலுவலர் ரம்யா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்