ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.
அதிமுக வேட்பாளர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறுமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் அதிமுக வின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் ஒப்புதல் கடிதத்தை அனுப்பினார்.
ஒப்புதல் கடிதங்களை பெற்றுக் கொண்டு தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் ஆகியோர் தேர்தல் ஆணையரை சந்திக்க டெல்லி சென்றனர்.
இந்த நிலையில் வேட்பாளர் செந்தில் முருகனை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வாக்குகள் கேட்போம் என்றார். வேட்பாளரை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளதால் ஈரோடு இடைத் தேர்தல் களத்தில் திருப்பம் ஏற்ப்பட்டுள்ளது.