காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை பசு அணைப்பு தினமாக அறிவித்திருந்ததை மத்திய விலங்குகள் நலவாரியம் திரும்ப பெற்றுள்ளது.
பிப்ரவரி மாதம் என்றதுமே காதலர் தினம் தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். காதலர்களுக்கான கொண்டாட்டங்கள் பிப்ரவரி 7ம் தேதி முதலே தொடங்கும். பிப்ரவரி 7ம் தேதி ரோஸ் டே என ஆரம்பித்து ப்ரொப்போஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே ஹக் டே, கிஸ் டே என ஒரு வாரமாக கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இந்நிலையில், பிப்ரவரி 14ம் தேதியை பசு அணைப்பு தினமாக மத்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காதலர் தின கொண்டாட்டம் என்பது மேற்கத்திய மரபை சார்ந்தது என்றும், இதனால் நமது மரபு அழிவின் விளிம்பில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
மேலும், பசுக்கள் இந்திய கலாசாரத்தின் முதுகெலும்பு என்றும், பசுக்கள் மனித குலத்திற்கு நன்மை அளிப்பதால் தாய்மைத்துவம் கொண்ட விலங்கு வகை என்றும் விலங்குகள் நலவாரியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிப்ரவரி 14ம் தேதியை பசு அணைப்பு தினம் என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையிலல், அந்த அறிவிப்பை விலங்குகள் நலவாரியம் திரும்ப பெற்றுள்ளது.
இதுகுறித்து விலங்குகள் நலவாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கால்நடை பராமரிப்பு நல அமைச்சகம் பிப்ரவரி 14ம் தேதி பசு அணைப்பு தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.