மயிலாடுதுறை, பிப்ரவரி- 18:
மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோவிலில் தென்னகப் பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 17-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாட்டியாஞ்சலி மூன்றாம் நாள் விழாவில் சென்னை பிரேமாலயா நாட்டியநிகேதன் குழுவினர், கோவை சிவந்ருத்யாஞ்சலி நாட்டியப்பள்ளி குழுவினர், கோவை லாவண்யா ஷங்கர் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மயிலாடுதுறை மயிலை சப்தஸ்வரங்கள் நுண்கலை பயிற்சியக குழுவினர் அறுபடைவீடு என்ற தலைப்பில் முருகனின் பிறப்பு துவங்கி மனக்கோலம் வரையில், அறுபடை வீடுகளில் புரிந்த திருவிளையாடல்கள், அவ்வை பாட்டிக்கு நாவல் பழம் அளித்த கதை, சூரபத்மனை சம்காரம் செய்தது, தந்தைக்கு ஓங்காரத்தை உபதேசம் செய்தது, வள்ளி தெய்வானை கரம் பிடித்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நாட்டிய நாடகமாக சமர்ப்பணம் செய்தனர்.
இதேபோல், பெங்களூரு ப்ளூட் & பீட் அகாடமி குழுவினர், கோவை லாஸ்யா சித்ரா ஸ்கூல் ஆஃப் டான்ஸ் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், அறங்காவலர் சிவலிங்கம் உள்ளிட்டோர் சான்றிதழும், நினைவு பரிசுகளும் வழங்கி பாராட்டினர்.
இதில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்