செம்பனார்கோவில், பிப்ரவரி- 24:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூர், செம்பனார்கோவில், ஆக்கூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.86 லட்சம் செலவில் நர்சரி கார்டன் அமைக்கப்பட்டுள்ள பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.50 லட்சம் செலவில் சித்திரை வாய்க்கால் மறு சீரமைக்கும் பணியினையும், செம்பனார்கோவில் கிராம ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1.90 லட்சம் செலவில் சத்தியமூர்த்தி தெருவில் மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பாக கம்பிவேலி அமைக்கும் பணியினையும், ரூ.4.90 லட்சம் செலவில் சத்தியமூர்த்தி தெருவில் மீன் மார்கெட் அமைக்கும் பணியினையும், ஆக்கூர் கிராம ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.5.86 லட்சம் செலவில் சமையல் கூடம் கட்டுமான பணியினையும், ரூ.1.85 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கழிவறை கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்சிர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும், செய்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, செம்பனார்கோவில் கிளை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தினையும், பொருட்கள் வாங்க வந்திருந்த மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, செம்பனார்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மீன் மார்கெட்டை ஆய்வு செய்தார் மேலும், தரமாக கட்ட வேண்டும் எனவும், கடை உரிமம் போட வேண்டும். அதன் மூலம் ஊராட்சிக்கு வருமானம் வர வேண்டும். அதை வைத்து நன்கு பராமரிக்க வேண்டும். சித்திரை வாய்க்கால் 100 நாள் பணியாளர்களைக் கொண்டு தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ததோடு, வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தார். ஆக்கூர் நடுநிலைப் பள்ளியில் மதிய உணவினை உண்டு பரிசோதனை செய்தார். உணவு சுவையாகவும், தரமாகவும் வழங்க உத்தரவிட்டார். உடனடியாக சமையல் எரிவாயு கொண்டு சமைக்க உத்தரவிட்டார். ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்று கூடுதல் கழிவறை கட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் திறனை கேள்வி கேட்டு அவர்களின் திறனை மாவட்ட ஆட்சியர் கண்டறிந்தார்.
இவ்வாய்வின்போது, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, விஜயலெட்சுமி, மீனா, ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறையை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்