மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மார்ச் முதல் வாரத்திலிருந்து முழுமையாக திறக்க அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. பள்ளியை மீண்டும் திறக்க அனுமதியளிக்க கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளியை திறக்க அனுமதி அளித்துள்ளது.
ஏற்கெனவே நான்காம் வகுப்பு முதல் நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில் மார்ச் முதல் வாரத்தில் இருந்து எல்கேஜி முதல் தொடங்க அனுமதி அளித்துள்ளது. குழந்தைகளின் தைரியத்துக்காக பெற்றோரையும் பள்ளி வர அனுமதிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளியின் மூன்றாவது தளத்துக்கு சீல் வைக்கப்பட்டது நீடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளை நீக்கியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.