எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தொடர்ச்சியாக 10 ஆம் தேதி அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசட்டனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நடந்து முடிந்த நிலையில், பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு கடந்த 23-ஆம் தேதி வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமானது. அதேபோல், ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லுபடியாகியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 -ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 10-ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
10-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெற உள்ள ஆலோசட்டனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களின் ஆலோசனைக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிறது.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டவுடன், மாவட்ட வாரியாக சுற்றுபயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். தேர்தலுக்கு பிறகு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுச் செய்யப்பட்டதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.