சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போலி வீடியோ வெளியிட்ட ஒரு நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் வடமாநில தொழிலாளர்களுடன் சமத்துவத்தை பேணும் வகையில் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீர்காழி பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் திமுக பிரமுகரமான ஷாவலியுல்லாஹ் என்பவரது ஏற்பாட்டின் பேரில் மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம் முருகன், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மயிலாடுதுறை நகர செயலாளர் மற்றும் நகர மன்ற தலைவர் செல்வராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களுக்கு சால்வை மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என்று வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மதிய விருந்து பரிமாறப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள் சமபந்தி விருந்தில் அமர்ந்து உணவு உட்கொண்டனர். இந்த நிகழ்ச்சி பற்றி தெரிவித்த தொழிலதிபர் ப.ஷா வலியுல்லாஹ் மயிலாடுதுறை மட்டுமன்றி தமிழக முழுவதும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தை சீர்குலைக்க நடைபெறும் சதித்திட்டத்தை திமுகவினர் ஒன்றிணைந்து முறியடிப்பார்கள் என்று தெரிவித்தார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்